திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். மேலும், இதில் திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசுகையில், “வீடு கட்டும் திட்டம், சாலை, பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். வரும் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட நானும் விண்ணப்பிக்க உள்ளேன். தலைவர் அனுமதித்தால் போட்டியிடுவேன்.
அமைச்சர்கள் மீது ஆதாரப்பூர்வமாக ஊழல் புகாரை நாங்கள் தெரிவித்தால், புகாருக்கு விளக்கம் தராமல் எங்கள் தலைவர் மீது தனிநபர் விமர்சனம் செய்கிறார்கள். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குகிறது. தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படவில்லை. சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றி, பணத்தை அதிமுகவினரே எடுத்துக் கொள்கின்றனர்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்த போது, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்தும், அவர்கள் எந்ததெந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் திமுக தலைவர் முடிவு செய்து அறிவிப்பார்" எனப் பேட்டியளித்தார்.
மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டாஸ்மாக் பேச்சு குறித்த கேள்விக்கு, “பாவம், வயசானவர். இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்லாமல், எங்களுக்குப் பட்டப்பெயர் வைப்பதால் என்ன பயன். இதன்மூலமாக குற்றச்சாட்டை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தையும் தமிழ்நாட்டையும் பா.ஜ.க குறிவைத்துள்ளது. எப்படி இருந்தாலும் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும். மூன்றாவது அணி அமைந்தாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் எடுபடாது. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” என்று கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.