Skip to main content

தனியாளாக பேருந்தை மறித்து கெத்து காட்டிய பாட்டி!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
grandma

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆதரவுடன் பந்த் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. பந்த் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மத்தியில் ஆளும் மோடி அரசு தந்த நெருக்கடியால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம், பேருந்துகளையாவது இயக்கிவிட வேண்டும் என்கிற முடிவு செய்து களத்தில் இறங்கியது. ஆனால் அதற்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் சில மாவட்டங்களில் ஒரு சில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர்க்கு அரசு பேருந்து சில சென்று கொண்டு இருந்தன.



இன்று காலை 9 மணிக்கு ஆம்பூர் நகர திமுகவினர் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்துவிட வேண்டும் என ந.செ ஆறுமுகம் அழைத்திருந்தார். அதன்படி ஆம்பூர் 28வது வார்டில் வசிக்கும் நகர மகளிர் அணியின் துணை செயலாளர் தேவயாணி என்கிற 60 வயது பெண்மணி காலை 8.30 மணிக்கே பேருந்து நிலையம் அருகில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்துக்கு வந்தார். அப்போது குறைந்த அளவு தொண்டர்கள், சில நிர்வாகிகள் அங்கு காத்துயிருந்தனர்.

அப்போது, திருப்பத்தூரில் இருந்து வேலூர்க்கு சென்ற அரசு அதிவிரைவு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்திற்க்கு வெளியே தங்க நாற்கர சாலை ஓரம் நின்றது. அங்கு நின்றிருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டுயிருந்ததை பார்த்து கோபமான தேவயாணி, எங்க தளபதி பேருந்துகள் எதுவும் ஓடக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டார், ஆனால் பேருந்து இயக்கறானுங்க என திட்டிக்கொண்டே தள்ளாத வயதில் திமுக கொடியுடன் சாலையின் குறுக்கே தனியாளாக ஓடினார். 

அதற்குள் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகம் எடுக்க முயன்றார். தேவயாணி பாட்டி விடாமல் தனியாளாக கொடியுடன் சாலையின் மையத்தில் நின்றுவிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். "எங்களுக்காகவா பந்த் அறிவிச்சோம்? மக்களுக்காக தானே அறிவிச்சியிருக்கிறோம்? உங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறையில்லையா?" என கேள்வி  கேட்டவர், "பேருந்தை எடுத்தன்னா கண்ணாடியை உடைச்சிடுவேன்" என தன் கையில் இருந்த கொடிக்கம்பைக் காட்டி பேச ஓட்டுநர் அதிர்ச்சியாகி இறங்கி வந்து, 'இப்போ போய்டறோம், திரும்பி வரல' என சமாதானம் பேசினர்.

திமுக உட்பட மற்ற கட்சியினர் தேவயாணியை சமாதானம் செய்து பஸ்ச விட்டுடுங்க எனச்சொல்ல அவரும் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொள்ள பேருந்து கிளம்பி சென்றது. தேவயாணி அதன்பின் சாலைமறியல், இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

திமுக கொடியுடன் தேசிய நெடுஞ்சாலையில் வயதான காலத்திலும் தனி மனுசியாக புகுந்து பேருந்தை நிறுத்திய கட்சி மீதான பற்றையும், மக்கள் மீதான பிடிப்பையும் பார்த்து திமுக மற்றும் பிற கட்சி தொண்டர்களே ஆச்சர்யப்பட்டு போயினர்.

சார்ந்த செய்திகள்