சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் இன்று (16.10.2023) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாற்றுத்திறனாளிகள் என்று பெயரிட்டு, அவர்களுக்கெனத் தனித் துறையையும் உருவாக்கி, விளிம்புநிலை மக்களான அவர்களது வாழ்வில் விளக்கேற்றியது திமுக அரசு. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக, அவர்களது நலன் பேணும் அரசாக, அவர்களது உரிமைகளை நிலைநாட்டும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. அதன்படி மனநலம் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மூன்று இல்லங்கள் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகைகள் உயர்த்தி, வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைக்கும் நடவடிக்கையாக புதிய கட்டடங்கள் அனைத்திலும், மின்தூக்கி, சாய்வுதளப்பாதைகளை அமைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு உகந்த கழிவறைகள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடையற்ற சூழல் அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் மாவட்ட அளவிலும் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சைகை மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அரசு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடையற்ற சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க மாநில விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தடையற்ற சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசின் முன்னெடுப்பு நடவடிக்கையாக, மாற்றுத்திறனாளிகள் இயக்குநரக வளாகத்தில் அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்தச் சிறப்பு முயற்சியினைப் பாராட்டி, புதுதில்லியில் நடைபெற்ற 'எம்பசிஸ்' விழாவில் "மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால்" 2023-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வடிவமைப்பு விருது அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தடையில்லாமல் மேற்கொள்ளும் நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை, தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தங்கும் இருப்பிடங்களிலும் தடையற்ற சூழல் அமைய மாவட்ட அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் விடியல் வீடு என்னும் திட்டம், முன்னோடி திட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உலக வங்கி நிதி உதவியுடன் உரிமைகள் திட்டம் 1773 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து மறுவாழ்வு நிபுணர்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும். முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.எழிலன், ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், அரசு துறைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர், அரசு உயர் அலுவலர்கள், மாநில ஆலோசனை வாரியக் குழுவினுடைய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பணிகளின் நிபுணர்கள், மாவட்ட உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள், அலுவல் சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.