கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதியை ஒதுக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற திமுக உறுப்பினர்களின் துணை கொறடாவுமான முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்த 25 லட்ச ரூபாயை ஒதுக்கி அதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியிடம் தந்துள்ளார்.
அந்த நிதியை கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், மங்கலம், சோமாசிப்பாடி, கழிக்குளம், மேக்களுர், துரிஞ்சாபுரம், கொளத்தூர், கோணலூர், அண்டம்பள்ளம், சு.வாளவெட்டி, நார்த்தாம்பூண்டி, ஆணானந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ தேவைக்காக இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.