ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு முன்னாள் எம்.பி.கணேசேமூர்த்தி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரு நாய்கள் தொந்தரவு குறித்து தடுப்பு நடவடிக்கைகள்,ஊராட்சி கோட்டை குடிநீர் முறையாக சில பகுதிகளுக்கு செல்லாதது, வார்டு பகுதியில் சாலை வசதிகள், சீரமைக்காத பாதாள சாக்கடை காரணமாக சாலை விபத்து மற்றும் ஆழ்துளை கிணற்றில் சாய கழிவு கலந்து சுகாதார சீர்கேடு போன்ற பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண குறித்து மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தடுக்க தவறியதால் 65 -க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும், மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்காததைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது தமிழக அரசு மீது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகாருக்கு, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையால் ஏற்பட்ட உயிரிழப்பை சுட்டிகாட்டி பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் கோகிலாவாணி பேசும்போது, எனது வார்டுக்கு போதிய தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பேசினார். ஏராளமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனது வார்டில் அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களாகவே வந்து பணிகளைத் தொடர்கின்றனர். இது குறித்து எனக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று பேசினார். இது குறித்து அவர் மேயரிடம் பேசும் போது மற்ற திமுக கவுன்சிலர்கள் அதற்கு பதில் அளிக்கவும் முயன்றனர். அப்போது திமுக கவுன்சிலர் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.