Skip to main content

ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்

Published on 18/11/2017 | Edited on 18/11/2017
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்:தேர்தல் ஆணையத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிப் போல தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போலி வாக்காளர்களை நீக்க தமிழக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
’’சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவை பெருமளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டுமென்று ஆளும் அ.தி.மு.க. அரசு பெருமளவில் போலி வாக்காளர்களை சேர்த்து, அதன் மூலம் ஜெயலலிதாவை வெற்றிப் பெற செய்தனர்.

ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள சுமார் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் கடந்த 16.10.2017 அன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் மூலமாகவும், தமிழக தேர்தல் அதிகாரியை நேரடியாக சந்தித்து புகார் அளித்து  வலியுறுத்தி வந்ததன் விளைவாக 30 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்றும், மேலும் 15 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கல் குறித்து தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம்  மேற்கொள்ள வேண்டும்.

இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ள 233 சட்டமன்ற தொகுதியிலும் உள்ளது. இது குறித்து தி.மு.க. சார்பிலும் மற்றும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மூலமாகவும்  பல்வேறு தருணங்களில் நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது வாக்காளர் பட்டியல் சேர்த்தல்  மற்றும் திருத்தல் பணிகள் தமிழக முழுவதும் தேர்தல் ஆணையத்தால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

2018 ஜனவரி முதல் வாரத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ள நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போலி வாக்காளர்களை நீக்கும் பணியினை முழுமையாக நிறைவடைய செய்து தகுதி வாய்ந்த தூய்மையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் அதிக கவனம் செலுத்தி, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, போலி வாக்காளர்கள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய புகாரின் நகல்களை தமிழக தேர்தல் அதிகாரிக்கும், தி.மு.க. தலைமைக் கழகத்திற்கும் அனுப்பி வைத்திட வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்