ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் மற்றொரு கட்சியில் போய் சேரப்போகிறார்கள் என்றால் கட்சி நிர்வாகிகள் அரண்டு விடுவார்கள். அதுவே தேர்தல் காலம் என்றால் நொந்துப்போய்விடுவார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவந்துவிட்டது. கட்சி மாறுவதும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த சுமார் 347 பேர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதற்கான விழா பேரணாம்பட்டில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அவர் முன்னிலையில் 347 பேர் கட்சியில் இணைந்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்பின் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு விசுவாசமானது என்று. அந்த நாயை எட்டி உதைத்தாலும் வளர்ப்பவனை விட்டு விலகாது. அவர்களுக்கு நன்றியுடனே இருக்கும். அதுப்போன்று தான் திமுககாரன், வீட்டு நாயைப்போன்று விசுவாசமானவன். மக்களாகிய நீங்கள் தான் எஜமானாக இருந்து திமுககாரன் என்கிற நாயை வளர்த்தீர்கள். திமுககாரன் நன்றியுள்ளவன், அவன் உங்களையே சுற்றி சுற்றி வருவான். தெருநாய்கள் அல்ல டோய் என்றவுடன் ஓடி விடுவதற்கு... வீட்டு நாய்’’ என்றார்.

மேலும் அவர், குடியாத்தம், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் பொருட்டு கைலாசகிரி பகுதியில் தொழிற்சாலை அமைத்து தரப்படும் என்றார். இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் வகையில் மக்கள் மன்றத்தில் திமுகவினர் உழைக்க வேண்டும் என்றார்.