திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் சாலையுள்ளது. இந்த சாலை அதிக தொலைவு கொண்டதாக இருக்கிறது என்பதால் திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, துருவம் வழியாக திருச்சி செல்லும் பாதையை இரண்டு வழி பாதையாக மாற்ற முடிவு செய்துள்ளார் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
இதற்காக அக்டோபர் 8 ஆம் தேதி காலை திடீரென நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்டார். 7 மீட்டர் அகலமுள்ள சாலையை 10 மீட்டர் அகலமுள்ளதாக மாற்றப்படுகிறது. இதற்காக திட்ட மதிப்பீடு செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடுவது என்பது நெடுஞ்சாலைத்துறையின் கொள்கை. தமிழ்நாட்டில் பாஜகவினர் போராட்டம் செய்துள்ளார்கள். கோயில்கள் வார இறுதி நாட்களில் மூடுவது என்பது கரோனா பரவாமல் தடுப்பதற்காகத்தான். அரசியல் செய்தவற்காக பாஜக அண்ணாமலை பேசுகிறார். இந்து மக்களுக்கும், ஆன்மீக மக்களுக்கும் நெருக்கமான கட்சி திமுக'' என கூறியதாக கூறப்படுகிறது.