ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு ரவுடிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை மூன்று பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''திமுக ஆட்சி இப்பொழுது சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசியல் கவுன்டர் செய்ய வேண்டும் என நினைக்கும் நேரத்தில் என்கவுன்டர்கள் அதிகமாக இருக்கிறது. எதற்கு கோர்ட்டு, எதற்கு கேஸ்? என்கவுண்டர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் இருந்தால் பரவாயில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 17 என்கவுன்டர்கள் நடைபெற்றிருக்கிறது. இது மிக அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதில் விரிவாக விசாரித்து குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும். அப்படியில்லாமல் குற்றவாளிகளை யாரையோ காப்பாற்றுவதற்காக இவையெல்லாம் நடத்தப்படுகிறதா என்ற அச்சம் வருகிறது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா பழக்கம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கூட்டணிக் கட்சியே அவர்கள் மீது அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக கூட்டணி இப்பொழுது வெலவெலத்து போய் இருக்கிறது என்பதுதான் உண்மையானது. அதனால் அவர்கள் ஆட்சியில் சரியாகக் கவனம் செலுத்தவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது'' என்றார்.