நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதே போன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் படத்திற்கு அமைசர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகமூடிகளை அணிந்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் மதுரையில் மட்டும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் திமுக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது. இந்த மசோதா குறித்து முடிவு செய்ய வேண்டியது குடியரசுத் தலைவர் தான். மத்திய அரசின் அறிவுரைப்படியும், ஆலோசனைப்படியும் குடியரசுத் தலைவர் தான் ஒப்புதல் தர வேண்டும். குடியரசுத் தலைவருக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது. அளுநருக்கு இதில் போஸ்ட் மேன் வேலை தான்.
சில நாட்களுக்கு முன்பு நீட் இளநிலைத் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆளுநருடன் உரையாட அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் சேலம் உருக்காலையில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய ஒருவர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அவரின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். அவர் ஆளுநரிடம் சில மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை என்னவாகும் தயவுசெய்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என ஆளுநரிடம் கேட்டார். அப்போது ஆளுநர் கொதித்துப்போய், கோவமடைந்த ஆளுநர் என்னிடத்தில் அதிகாரம் இருந்தால் கூட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக ஆளுநர் சொல்கிறார் என்றால் இதையெல்லாம் கண்டித்து தான், நீட் தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று தான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் திமுக துணை அமைப்புகள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் கூட திமுக ஆதரித்தது” எனத் தெரிவித்தார்.