தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அதன்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 90 சதவீத வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னரே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுவை வாங்கி வருகிறார்கள். சில கட்சிகளில் விருப்பமனு பெறும் தேதியே நிறைவடைந்துள்ளது. வேட்பாளர் அறிவிப்பு மட்டுமே பாக்கி என்ற நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.