17வது மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை முடித்துள்ளன. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக 4 தொகுதிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை என்று உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.
வடசென்னை அல்லது மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, தேனி, விருதுநகர் தொகுதிகளை விருப்பப்பட்டு தேமுதிக வலியுறுத்தியுள்ளது. தேனியில் விஜய பிரபாகரன், கள்ளக்குறிச்சியில் சுதீஷ் ஆகியோரை போட்டியிட வைக்க பிரேமலதா முடிவு செய்துள்ளார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதனிடையே தேனி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். தேனிக்கு பதில் திருச்சி தொகுதியை வைத்துக்கொள்ளுமாறு பிரேமலதாவிடம் தெரிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தேனிதான் வேண்டும் என்று பிரேமலதா மீண்டும் வலியுறுத்தியதால் அவர் மீது கோபத்தில் உள்ளார்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பதற்கு முன்னதாகவே கடந்த வாரம் தேனியில் உள்ள தேமுதிகவினர், தேனி பாராளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர்.