Skip to main content

தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்

Published on 18/10/2017 | Edited on 18/10/2017
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் 5 முக்கிய பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டன.

இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருவாய் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக 1 லட்சத்து 48 ஆயிரத்து 671 பேர் சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 82 ஆயிரத்து 425 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.4 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இதே போன்று தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக இன்று (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 88 ஆயிரத்து 353 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக மட்டும் 84 ஆயிரத்து 48 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்