சேலத்தில், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளை குறிவைத்து திருட்டு, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் 11 ரவுடிகள் உள்பட 53 பேரை மாநகர காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகர பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதில் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
முதல்கட்டமாக கடந்த அக். 24- ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் ஒரே நாளில் 37 தொழில்முறை ரவுடிகள் உள்பட 56 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக அக். 31- ஆம் தேதி நடந்த வேட்டையில், 11 ரவுடிகள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேர் சந்தேக நபர்கள்; 17 பேர் பிடியாணை குற்றவாளிகள் ஆவர்.
இவர்களில் பிரபல தொழில்முறை ரவுடிகளும், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளும் சிக்கினர். குறிப்பாக, லைன்மேடு சாஹூல் ஷெரீப், கடத்தூர் மாணிக்கம், தலைமலை அருண்குமார், கிச்சிப்பாளையம் நெப்போலியன், மேம்படிதாளம் சரவணன், ஜான்சன்பேட்டை வினோத்குமார், பொன்னம்மாபேட்டை மாதேஸ், அரிசிபாளையம் கோபால், சுக்கம்பட்டி முனியப்பன், சின்ன கொல்லப்பட்டி நவநீதகிருஷ்ணன், சீலநாயக்கன்பட்டி செந்தில்குமார் ஆகியோர் அடங்குவர்.
ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து கும்பலால் பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர காவல்துறைக்கு 100 அல்லது 94981-00945 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.