தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. 24 மணி நேரமும் அனைத்து துறைகளையும் தீவிரமாகச் செயல்பட வைத்து இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதற்குத் தமிழக முதல்வர்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் கஜானா காலியாகி 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது. இதற்கிடையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டன. ஆனால் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அதன் ஒரு கட்டமாக தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை எளிய மக்களுக்குத் தீபாவளி போனஸ் ஆகும். இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் பேருக்கு 6,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். வங்கிகளில் அடமானமாக வைத்துள்ள நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாகும்.
புது நகைக்கடன் தள்ளுபடி என்பது எந்த மாநிலத்திலும் கிடையாது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மூலம் 15 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது 21,000 கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றனர். கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற போது கூட்டுறவுத்துறையில் உள்ள கடனை நினைத்து எனது மனம் மிகவும் பாடுபட்டது. எப்படித் தீர்வுகாண முடியுமா எனக் குழம்பிப் போயிருந்த நேரத்தில் பலமுறை என்னை நேரில் அழைத்து இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உதவிக்கரம் நீட்டினார் தமிழக முதல்வர். கூட்டுறவுத்துறையில் ஆராய்ச்சி செய்யக்கூடிய வகையில் புதிய கல்லூரியைக் கொடைக்கானலில் அமைக்க உள்ளோம். கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்பது நேர்மையாக நடைபெறும். எந்த புகாருக்கும் இடமளிக்காமல் உரிய முறையில் வீடு தேடிச் சென்று தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைக்கான நகையைத் திருப்பி வழங்கப்படும்.
கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கியில் உள்ள நிர்வாகஸ்தர்கள், அலுவலர்கள் பணியாளர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. கடந்த ஆட்சியின் போது கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்தாமல் அவர்களே தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்துகொண்டனர். இதுபோல் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஆகவே இதற்கு நிச்சயம் முடிவு வரவேண்டுமெனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே கூட்டுறவுச் சங்க தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி வைப்பதில் திமுக அரசு எப்பொழுதும் உறுதியாக இருக்கும். 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி வைப்பதற்குத் தமிழக முதல்வர் முயற்சி செய்து வருகிறார். இதில் திமுக அரசு எப்பொழுதும் விட்டுக் கொடுக்காது.
விவசாய பயிர்க் கடனுக்கான கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்கி சென்று கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கத்தில் கடன் கேட்டால் வட்டி இல்லா கடன் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடன் கேட்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு உடனடியாக அதிகாரிகள் கடன் வழங்க வேண்டும் இல்லை என்றால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெறும்'' என்று கூறினார்.