கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடியில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனம் மற்றும் பணம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, காரின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்தவர்கள் மீதான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படாததால் தேர்தல் ஆணையம் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட மூன்று பேரையும் தேர்தல் அல்லாத பணிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
அதனையடுத்து, கோவை மாவட்டத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையராகப் பணியில் இருந்த மயில்வாகனம், நேற்று (26/03/2021) மாலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்., இன்று (27/03/2021) திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர் அதன்பின் மரியாதை நிமித்தமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், "தொடர்ந்து உங்களுடைய உதவியும் ஆதரவும் தந்து இந்த தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்கள் முசிறி சாலையில் பெட்டவாய்த்தலை அருகே கைப்பற்றப்பட்ட ஒரு கோடி ரூபாய் தொடர்பான சம்பவத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு என்ன நிலையில் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் நான் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. பதிவு செய்யப்பட்டு இருக்கக்கூடிய முதல் தகவல் அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு, அதன் பின் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறேன்" எனக் கூறினார்.