கடந்த ஒருமாத காலமாக இந்தியாவில் வேகமெடுத்துவந்த கரோனா இரண்டாம் அலையின் தாக்கம், அரசு விதித்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையடுத்து, மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசி குறித்து நிலவும் குழப்பான கருத்துகளால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதில் தயக்கம் காட்டிவருகின்றனர். இந்தச் சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் தேவையை மக்களிடம் கொண்டு செல்ல மருத்துவர்களும் மருத்துவமனையும் உரிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அது அவர்களின் அடிப்படை கடமை என்றும் ஊட்டச்சத்து நிபுணரும் மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதலே இந்த விவகாரத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துவரும் திவ்யா சத்யராஜ், தற்போது ஜி.எஸ்.டி விவகாரம் தொடர்பாக மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றும் வைத்துள்ளார். இது குறித்து தன்னுடைய மகிழ்மதி இயக்கத்தின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா சிகிச்சைக்கு பயன்படும் "மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுகொண்டுள்ளார்.