பெரம்பலூர் நகரில் உள்ள மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் 65 வயது கருப்பண்ணன். இவர் பெரம்பலூர் நகரிலிருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் ஜவுளிக்கடை, நகைக்கடை வைத்து நடத்திவருகிறார். அதே பகுதியில் அவரும் குடியிருந்துவருகிறார். 27ஆம் தேதி இரவு பத்தரை மணி அளவில் முன்னிரவு நேரம் என்பதால் வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டாமல் கருப்பண்ணன் டிவியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி, மகள் இருவரும் அருகிலிருந்த மற்றொரு வீட்டில் இருந்துள்ளனர்.
இரவு சுமார் பத்தரை மணி அளவில் முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கருப்பண்ணன் வீட்டிற்குள் புகுந்தது. கருப்பண்ணன் சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியைப் பிடுங்கிய அந்தக் கும்பல், பீரோவைத் திறந்து அதில் இருந்த 103 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், பத்தாயிரம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார் ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த கொள்ளைக் கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த கருப்பண்ணன் உடனடியாக பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் பைக்கில் வந்து சென்றது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இந்தக் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். பெரம்பலூர் நகரில் முன்னிரவு நேரத்தில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.