கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடலூர் சத்திய ஞான சபையில் பொதுமக்களை ஏமாற்றி, கள்ளநோட்டு மாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நெய்வேலி காவல் உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டதன் பேரில் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையில் அடங்கிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக டாட்டா சுமோவுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
பின்னர் அவரையும் டாட்டா சுமோவையும் சோதனை மேற்கொண்டபோது, கட்டுக்கட்டாக கருப்பு நிறத்திலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்து வடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கள்ள நோட்டு மாற்ற முயற்சித்த நபர் பெரம்பலூர் மாவட்டம், வதிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் ராமசாமி என்பதும், ஒரு லட்சம் பணம் கொடுத்தால் இரண்டு லட்சம் பணம் தரப்படும் என நூதன முறையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்காதவாறு, ரசாயன பவுடர் கொண்டு அனைத்து நோட்டுகளையும் கருப்பு நிறமாக மாற்றி வைத்திருப்பதாகவும், கருப்பு நிறமாக மாற்றப்பட்ட கள்ள நோட்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஒரிஜினல் 500 ரூபாய் பணத்தையும் கருப்பு நிறமாக மாற்றி ஒரே கட்டாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பணத்தின் மீது ஆசை கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒன்றுக்கு இரண்டு மடங்கு என ஆசையை தூண்டி, ஒரிஜினல் பணத்தை வாங்கிக்கொண்டு, கள்ள நோட்டுகளை தந்துவிடுவதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பணத்தை வாங்க வருபவர்களிடம், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்றும், காவல்துறையினருக்கு தெரியக்கூடாது என்பதினால் பணத்தை கருப்பு நிறமாக மாற்றி வைத்திருப்பதாகவும், பணத்தை கழுவினால் ஒரிஜினல் பணமாக மாறிவிடும் என்றும் கூறி, கள்ள நோட்டுடன் வைத்திருந்த ஒரிஜினல் நோட்டை தானாகவே எடுத்து தண்ணீரில் கழுவி காண்பித்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் எவ்வாறு கள்ள நோட்டுகளை, கருப்பு நிறமாக மாற்றுவது என்பது குறித்தும், கருப்பு நிறத்தில் இருந்து ஒரிஜினல் பணத்தை எவ்வாறு திருப்பி எடுப்பது என்பது குறித்தும் செய்து காண்பித்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்து, கள்ளநோட்டுகள் எங்கே அச்சடிக்கப்படுகிறது என்றும், கள்ளநோட்டு மாற்றுவதற்கு யாரெல்லாம் உறுதுணையாக உள்ளார்கள் எனவும் பல்வேறு கோணங்களில் நெய்வேலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் சம்பந்தப்பட்ட நபர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, சென்னையில் கள்ள நோட்டு மாற்ற முயற்சித்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.