தமிழகத்தில் கீழமை நீதிமன்றப் பணிகள் மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம், புதுச்சேரியில் மறு உத்தரவு வரும்வரை கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. கைதிகளை சிறையில் அடைப்பதற்கான உத்தரவைத் தவிர்த்து, பிற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் முன் அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்படுகிறது. நீதிபதிகளிடம் முன் அனுமதிப் பெற்ற பிறகே நீதிமன்ற வளாகத்திற்குள் வர வேண்டும். வழக்கறிஞர்கள், வழக்காடிகள் அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் தேவையின்றி நீதிமன்ற கட்டடத்துக்குள் நுழைய வேண்டாம்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் உயிரிழந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.