விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் அளவிடுதல், கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கடலூர் மாவட்டம், பு.முட்லூர் எனும் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தின் வழியாக இந்த சாலை போடுவதற்கான நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வழித்தடத்தை அமைக்கவேண்டும், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பு.முட்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் 2-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையறிந்த புவனகிரி வட்டாட்சியர் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புவனகிரி வட்டாட்சியர், திட்ட இயக்குநர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகக் கற்பனைச் செல்வன், கொளஞ்சியப்பன், தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதன் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வழித்தடத்தைத் தேர்வுசெய்யவேண்டும், கொத்தட்டை டோல்கேட்டை இடமாற்றம் செய்யவும், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தரக் கோரியும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனுடன் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து முடிவு எடுப்பதாகவும், பொதுமக்களுக்குப் பிரச்சனை இல்லாமல் வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.