வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலானது இன்று இரவு கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சற்றே கொஞ்சம் தாமதமாகி இரவு முதல் அதிகாலை வேளையில் கரையைக் கடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வட தமிழகம்- புதுவை- தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி புயலானது நகர்ந்து வருகிறது. மகாபலிபுரத்திற்கு அருகே 'மாண்டஸ்' காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ தாழ்வு மண்டலமாகவோ கடக்காமல் புயலாகவே கரையைக் கடக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் இடங்களில் கனமழை, மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று பகுதிகள் குறிப்பிடப்படும் முன் பகுதி, கண் பகுதி, பின் பகுதி என்று குறிப்பிடுவார்கள். முன் பகுதி கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். கண் பகுதி கரையைக் கடக்கும் பொழுது அமைதியான சூழல் நிலவும். அதன்பிறகு புயலின் பின்பகுதி கரையைக் கடக்கும் போது மீண்டும் காற்றின் வேகமும் மழையும் அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.