திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் ஆர்.எம். காலனியில் உள்ளது. இந்த மின் மயானத்துக்கு நகர்ப் பகுதிகள் மட்டுமல்ல, கிராம பகுதியில் இருந்தும் இறந்தவர்களின் உடல்களைத் தினசரி கொண்டுவந்து தகனம் (எரித்து) செய்துவிட்டு போவது வழக்கம். இந்த மின் மயானத்தில் தினசரி பத்து பேர்களின் உடல்கள் தகனம் செய்வது வழக்கம். ஆனால், தற்போது கரோனா காலம் என்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தொற்றால் இறந்தவர்கள் என தினசரி 20 முதல் 25 வரை இறந்தவர்களின் உடல்கள் மின்மயானத்திற்கு எரியூட்டுவதற்கு வருகின்றன.
அதனால் காலை 7 மணி முதல் இரவு 12 மணிவரை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதோடு மின் உபயோக பொருட்களும் தொடர்ந்து நெருப்பில் இருப்பதால், சூடு தாங்காமல் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு திடீரென ஷட்டர் பழுதாகிவிட்டது. இதனால் இறந்தவர்களின் உடல் எரியூட்டும் செய்யும்போது அதனுடைய புகை குழாய் மூலம் போகாமல் கீழேயே கரும்புகையாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மருதாணிகுளம், ராமநாதபுரம், கோவிந்தாபுரம், ஆர்.எம்.காலனி உட்பட சில பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டுவருவதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அந்தப் புகையை சுவாசித்தால் மூதாட்டி ஒன்று மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார். அதோடு துர்நாற்றமும் வீசிவருவதால் அப்பகுதிகளில் வண்டி வாகனங்களில் செல்லக் கூடிய மக்களும் அந்தப் புகையை சுவாசிக்க கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டும்வருகிறார்கள். அப்படி இருந்தும் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைப்பிடித்துவந்தனர்.
இந்த விஷயத்தை பி.ஏ. தண்டபாணி மூலம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் காதுக்கு கொண்டு சென்றதின் பேரில், உடனடியாக மாநகராட்சி கமிஷனரை தொடர்புகொண்டு மின் மயானத்தில் உள்ள ஷட்டர் குளறுபடிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும், மின்மயானத்தில் வெளியேறும் புகை எப்போதும்போல் குழாய் மூலம்தான் வெளியேறுமே தவிர, குடியிருப்பு பகுதிகளுக்குள் போகக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டார். அதோடு அதிமுக ஆட்சியில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் நாகல் நகர் வேடபட்டி மின் மயானத்தையும் உடனடியாக சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகளும் மின்மயானத்தில் உள்ள ஷட்டர் குறைபாடுகளையும், கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மின்மயானத்தையும் சரி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர்.