Skip to main content

ஆங்கிலேயர்- தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு வயலில் கண்டுபிடிப்பு!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Discovery in the field of inscriptions related to the demarcation between the English and the Thondaiman king!

 

தமிழ்நாட்டிலேயே அதிகமான தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், புதைவிடங்கள், வாழ்விடங்கள், சங்ககால கோட்டைகள் என ஆயிரக்கணக்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ள புதுக்கோட்டையில் மற்றுமொரு வரலாற்றுச் சின்னம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், நகரப்பட்டி உடைகுளம் வயலில் ஆங்கிலேயர் தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு செவலூர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சரவணன் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் , தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

இக்கல்வெட்டு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, புதுக்கோட்டை தொண்டைமான்கள் மற்றும் ஆங்கிலேயரிடையே இணக்கமான உறவு இருந்துள்ளதைத் தொடர்ந்து, இந்திய ஆட்சிப்பிரதேசத்தில் தனித்துவமிக்க நிர்வாக சுதந்திரத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானம்  செயற்பட ஆங்கிலேய அரசு அனுமதித்திருந்தது. தொண்டைமான் ஆட்சிப்பகுதி எல்லை உள்ளிட்டவற்றை தெளிவாக வகுத்ததன் மூலம் எவ்வித முரண்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இரு தரப்பு அரசுகளும் செயலாற்றியதை தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரப்பட்டி எல்லைக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. 

 

Discovery in the field of inscriptions related to the demarcation between the English and the Thondaiman king!

 

கல்வெட்டுச்செய்தி : 
1.1822 வருஷம் சுலாயி 
2.மாதம் 11  சரியான தமிழ் சித்தி
3.ரை பானு வருஷம் ஆவணி மாதம் .
4.மதுரை சில்லாக்கலெக்க
5.ட்டர் மேஷ்த்தரவர்கள் சூபி
6.த்தார் துரையவர்களு
7.டைய உத்தரவுப்படிக்கி
8.மருங்காபுரி தாலுகா
9.வுக்கு சேற்ந்த கலிங்
10.கப்பட்டி கிராமத்து
11.தொண்டைமானார் புது
12.க்கோட்டையிலா .கால்
13.லம்பட்டி (மயிசல்) செயிது
14.யிந்த எல்கைக்கார்தி
15.ரங் கல் நடலாச்சுது என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

 

இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி1822- ஆம் ஆண்டு மதுரை கலெக்டர் மேஸ்தர் சுபிதார் என்பவாின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டம், மருங்காபுாி தாலுகாவைச் சேர்ந்த கலிங்கப்பட்டடி கிராமத்திற்கும் புதுக்கோட்டை தொண்டைமானார் ஆட்சிப் பகுதியில் உள்ள கல்லம்பட்டி கிராமத்திற்கும் எல்லை நிர்ணயம் செய்து எல்லைக் கல் நடப்பட்ட செய்திக் குறிப்பை இக்கல்வெட்டு தொிவிக்கிறது.

 

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இணக்கமான சூழல் இருந்ததையும் ராஜா விஜய இரகுநாத ராய தொண்டைமான் (1807-1825) ஆட்சிக் காலத்தின் போது இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

 

இந்த கள ஆய்வின் போது கரகமாடி ப.சரவணன், சுப்பிரமணியன், கா.சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


சார்ந்த செய்திகள்