திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் வாகரை கிராமத்தில் பழைய வீட்டை புதுப்பிக்கும்போது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘டச்சு’ நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வாகரை கிராமத்தைச் சார்ந்த விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன், தனது வீட்டில் டச்சு நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். அதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் அரிஸ்டாட்டில் மற்றும் லட்சுமண மூர்த்தி கூறியதாவது, “டச்சுக்காரர்கள் கிபி 1602இல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கினார்கள். இந்தக் கம்பெனி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், இலங்கையிலும் வாணிபம் செய்துவந்தது. அப்போது புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் இது.
நாணயத்தின் ஒருபக்கத்தில் டச்சு கம்பெனியைக் குறிக்கும் (டச்சு மொழியில் விரிங்கே ஊஸ்ட்டின்டிஸ்ட் கம்பெனி) வி.ஓ.சி. என்ற குறியீடு உள்ளது. மறுபக்கத்தில் சிங்கம் சின்னம் இடம்பெற்றுள்ளது. இந்த நாணயம் ஜாவா, மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்காக தயாரிக்கப்பட்டவை. பின்னர் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த நாணயங்கள் ராமநாதபுரம், திருப்புல்லாணி, சேதுக்கரை, பால்கரை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன” என்று கூறினர். இப்படி 400 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த டச்சு நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.