திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், மண்ணெண்ணையையும் எடுத்துவந்தது பரபரப்பை உண்டாக்கியது. திருவாரூர் மருதபட்டினம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி (32) என்ற மாற்றுத்திறனாளி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் (65) என்ற கணவரும், சீதளா தேவி (10), ஐயப்பன் (5) என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வரும் காமாட்சிக்கு கரோனா கெடுபிடியால் வருமானம் இல்லாமல் போக, கடந்த ஆறு மாதமாக வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவித்துவருகிறார். வீட்டின் உரிமையாளரோ வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரையும் வெளியே துரத்தியதால் வேறு வழியின்றி பேருந்து நிலையத்திலேயே தங்கியிருக்கிறார்.
வீட்டின் உரிமையாளரோ வாடகை கேட்டு சில நபர்களை அனுப்பி காமாட்சியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் காமாட்சி, தனக்கு தங்குவதற்கு ஒரு இடம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவரது கையில் மண்ணெண்ணெய் இருப்பதைக் கண்ட காவல்துறையினர், அதைப் பிடுங்கி அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிம் கேட்டபோது, அவருக்கான உதவிகளை உடனடியாக செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.