பொள்ளாச்சி அருகே உள்ளது மாமரத்துப் பட்டி கிராமம். குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டது இந்த ஊர். இங்கு சீனிவாசன் என்ற 28 வயது நிரம்பிய வாலிபர் கிரிக்கெட் மோகத்தால் சிறு வயதில், தனது நண்பருடன் தென்னை மட்டையில் பேட் செய்து விளையாடுவார்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தாய் தந்தை இறந்ததால் பாட்டி ரங்கம்மாள் கூலி வேலைக்குச் சென்று சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் சுரேஷை படிக்க வைத்தார். படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்ற சீனிவாசன் பொறியியல் படிப்பில் தேர்வு பெற்றார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து திறமைகளை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோர்.
இதுவரை 100 போட்களில் விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இறுதி தகுதித்தேர்வு நடக்கும்போது சிறு விபத்து ஏற்பட்டு மீண்டு உள்ளார்.
குஜராத், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை என இவர் கால் பதித்த இடங்களில் எல்லாம் அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், நவம்பர் மாதம் 2ஆம் தேதி, மாற்றுத்திறனாளிக்கு நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் சென்னை ஸ்டார்ஸுக்கு விளையாட துபாய்க்குச் செல்ல பணம் இல்லாததால், தனது சகோதரர் சுரேஷுடன் சென்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரும் சீனிவாசனுக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும், தன்னைப்போல மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த சீனிவாசன், சாதிக்க கை தேவையில்லை, மனசில் தைரியம் இருந்தால் போதும். என தற்போது தன்னம்பிக்கையுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.