நடிகர்கள் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இன்று முன்னணி நடிகர்களாக இருப்பதற்கு இயக்குனர் பாலா ஒரு முக்கியமான காரணம். பாலா இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் ஆகிய படங்கள் மக்கள் மத்தியிலும், சினிமா பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். இதில் பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் இவரது படங்களில் நடித்தால் அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் பாலா படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கால் சீட் கொடுத்தனர். ஆனால் தற்போது அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாத காரணத்தாலும், முன்பு மாதிரி பாலா படங்கள் தற்போது இல்லை என்பதாலும் அவரது படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகம் செய்து பாலா ரீமேக் செய்தார். ஆனால், பாலா இயக்கிய அந்தப் படம் தாங்கள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று கூறி, தயாரிப்பு நிறுவனம் முழு படத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து புதிதாக படத்தை எடுத்தது. இப்படி, ஒரு பிரபல இயக்குனர் இயக்கிய படத்தை தரக்குறைவாக இருப்பதாகச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது தமிழ் சினிமா வரலாற்றில் இது முதல் முறை.
இந்த சம்பவத்தால் பாலா அதிர்ச்சி அடைந்து அறிக்கை விட்டார். அதில் துருவின் எதிர்காலம் கருதி இந்த பிரச்சனையை நான் பெரிதாக்கவில்லை என்று கூறினார். இதனையடுத்து பாலா ஆர்யாவை வைத்து படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் ஆர்யாவும் கால்சீட் இன்னும் தரவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இயக்குனர் பாலா தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.