திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 நாள் போராட்டத்திற்கு பின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் அந்த சின்னஞ்சிறு பிஞ்சு உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு குடிநீர் மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் பயன்பாட்டில் இல்லாதா ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளை 24 மணிநேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்றவேண்டும் என வாரிய பொறியாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவது தொடர்பாக சந்தேகம் இருந்தால் twadboardtn.gov.in என்ற இணையத்தளத்திலோ, 9445802145 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.