அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுமென புதிய நிபந்தனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நெல் மணிகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. அப்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்துவந்தது.
இந்த நிலையில், தற்பொழுது கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் வாங்கி அதனை ஆன்லைனில் பதிவு செய்வதோடு பின்னர் அடங்கல் மற்றும் சிட்டா, வங்கி கணக்கு எண் புத்தக நகல், ஆதார் நகல் கொடுக்க வேண்டும் அதை வைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இத விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள ஆசூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு தமிழ்நாடு விவசாய சங்க பேரவை தலைவர் சாமிநாதன் தலைமையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.