திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சீதாபதி வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக வேட்பாளர் சீதாபதி, அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் திமுக வேட்பாளர் சீதாபதி, 61,879 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகளும் பெற்றனர். 101 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சீதாபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. சீதாபதி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் எஸ்.பி ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனவும், தபால் வாக்குகள் சீதாபதியின் மகனால் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது எனவும் வாக்கு இயந்திரம் பழுதடைந்ததாகவும் அதிமுக வேட்பாளர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.