தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கரையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் "உண்டுஉறைவிட பள்ளி" செயல்படுகிறது. இந்த பள்ளியில் சொக்கன் அலை ஊரடி-ஊத்துக்காடு, கரும்பாறை, பட்டூர், சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைகிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இது துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இது திகழ்கிறது. இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் காப்பாளராக ராகவன் உள்ளார். அத்துடன் இடைநிலை ஆசிரியை, சமையலர், காவலாளி ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த இந்த உண்டுஉறைவிட பள்ளியில் கடந்த மாதம் 12 பேர் படித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. இங்கு 5-ம் வகுப்பு வரை படிப்பை நிறைவு செய்வதே பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு பெரும்சுமையாக மாறி விட்டது.
மகிழ்ச்சியான கல்வியும், ஆரோக்கியமான உணவும் கொடுத்தாலோ இங்குள்ள குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவது தடுக்கப்படும். ஆனால் அவை இரண்டும் இங்கே கிடைப்பது இல்லை. அரசு வழங்கியுள்ள உணவு பட்டியல் இங்கு பின்பற்றப்படுவது கிடையாது. பெரும்பாலான நாட்களில் காலை நேர உணவாக வெறும்சோறும், தேங்காய் சட்னியும் வழங்கப்படுகிறது. இரவுக்கு தனியாக உணவு சமைப்பது கிடையாது. மதியம் சமைக்கும் உணவே இரவு வழங்கப்படுகிறது.
இங்கு மின்விளக்கு வசதி கிடையாது. சோலார் மின்விளக்கு இருந்தாலும் அவை முழு இரவு நேரத்தையும் வெளிச்சமாக்குவது இல்லை. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்புக்கான பாடங்களை தலைமை ஆசிரியர் நடத்த வேண்டும். ஆனால் தலைமை ஆசிரியர் ராகவன் சரிவர பணிக்கு வருவது இல்லை. மாணவர்களுக்கு எந்த மாதிரியான உணவு வழங்கப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தலைமை ஆசிரியர் மீது எழுந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அவருக்கு டிசம்பர் மாதம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, 17பி விளக்க நோட்டீஸ் வழங்கினார். ஆனால் அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினை ஆறப்போட்டு, தலைமை ஆசிரியரை காப்பாற்றும் செயலில் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விளக்க நோட்டீஸ் பெற்றபோதிலும், தலைமை ஆசிரியர் ராகவன் மீண்டும் தனது பழைய நடைமுறையை தான் கடை பிடித்து வருகிறார். வாரத்தில் ஒருமுறை அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வந்து, வருகைப்பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்து போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று புகைகின்றனர் நக்சல் தடுப்பு பிரிவினர்.
பழங்குடியின குழந்தைகள் நலனில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தனிக்கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், கலெக்டரும் இந்த பிரச்சனையை கண்டும், காணாமல் இருப்பது பழங்குடியின குழந்தைகளுக்கு இருக்கும் ஒற்றை நம்பிக்கையும் கைவிட்டு போகும் நிலையில் உள்ளது. அதனால் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அந்த தலைமையாசிரியர் ராகவன் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? என பொதுமக்களும், பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.