நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பெருவாரியான மக்களுக்கு இன்று வேலை நிறுத்தம் என்பதே தெரியாததால் பேருந்து நிலையங்களில் குவிந்த மக்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் கல்வி நிலையங்களுக்குச் செல்லமுடியாமல் தவித்தனர். திண்டுக்கல்லில் 80 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. வழக்கமாக 390 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அங்கு 97 பேருந்துகளே இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்துகளில் அதிக கூட்டத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''சும்மாவே தொங்கிட்டு போவாங்க பசங்க... ஸ்ட்ரைக் வேற... சும்மா இருப்பாங்களா'' என இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர் இணையவாசிகள்.