நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்த நிகழ்வின் போது, புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு பழங்குடியின சிறுவனை அகற்றச்சொன்னார். அந்த சிறுவன் செருப்பை அகற்றிய வீடியோ வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், அந்த சிறுவனை தனது பேரனாக நினைத்துதான் அப்படி செய்யச் சொன்னேன் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்து புகைந்து கொண்டிருந்த பிரச்சனையை முடிக்க நினைத்தார்.ஆனால் நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், அமைச்சரின் செருப்பை கழற்றிய பழங்குடியின மாணவர் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார் அளித்ததை அடுத்து, இந்த பிரச்சனை பற்றி எரிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், " அந்த நிகழ்வு குறித்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தேன்" என்று கூறினார்.