திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் ஜோதி முத்து போட்டியிடுகிறார். அதுபோல் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதியில் அதிமுக சார்பில் தேன்மொழி போட்டியிடுகிறார். இந்த இரு வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வத்தலகுண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது கூடியிருந்த வாக்காள மக்களிடம் ஜோதி முத்துவுக்கு மாம்பழத்துக்கும் தேன்மொழி இரட்டை இலை சின்னத்துக்கும் ஓட்டு போடச் சொல்லி வலியுறுத்தினார்.
அதன் பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு சுமார் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். எனவே நமது நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது . நாடு பாதுகாப்புக்காக இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அதேபோல் திறமையான பிரதமர் ஆட்சியில் இருக்க வேண்டும். எனவே மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்.
அதற்காக நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் . அதுபோல் சதிகாரர்களின் சூழ்ச்சியால் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு வெளியே சென்று எம்எல்ஏ பதவிகளை இழந்தனர். எனவே நிலக்கோட்டை இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் தேன்மொழிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல் முதல் அமைச்சராக இருக்கிறார்.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வரமுடியும். நான் கிளைச் செயலாளராக கட்சி பணியைத் தொடங்கி படிப்படியாக இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். ஆனால் மு. க. ஸ்டாலின் அவருடைய அப்பா தயவால் பதவிக்கு வந்தார். விவசாயி முதல்-அமைச்சராக இருப்பதால் மு. க. ஸ்டாலின் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விவசாயி தானே ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். இது மக்களின் அரசு அதிமுக அரசை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
தமிழகத்தில் ஊழல் நடப்பதாக மு க ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அழகு நிலையம் நடத்தும் சென்னை திமுக பிரமுகர் தாக்குகிறார் மற்றொரு திமுக பிரமுகர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுக்கிறார்கள் மறுநாள் சென்று ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் ஆட்சியிலிருப்பது அதிமுக நான் முதலமைச்சர் நாங்கள் தானே திட்டங்களை கொண்டு வர முடியும்.
ஸ்டாலின் எப்படி திட்டங்களைக் கொண்டு வருவார். தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்திற்காக ஸ்டாலின் நாடகம் போடுகிறார். இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி வர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவர முடியும் எனவே வாக்காள மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தின் கபோது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.