திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு, பழைய பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் - பழனியம்மாள் மகள் கார்த்திகா ஜோதி. இவர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சாலை, செம்மடைபட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி கார்த்திகா ஜோதி கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மாணவி ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சம்பவத்தன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வ மகேஸ்வரி மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார். மாணவி சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை மற்றும் மாணவி படித்து வந்த கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
6 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று (26.02.2023) உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் மாணவியின் இறப்பிற்கு நீதி விசாரணை கேட்டு, நேற்று ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் காவல்துறையினர் மாணவியின் பெற்றோரிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மறியலைக் கைவிட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவியின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.