திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை இடைத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியனும் அதிமுக வேட்பாளர் தேன்மொழியும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியனை ஆதரித்து துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி பிரச்சாரம் செய்தார். இதன் தொடர்ச்சியாக திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று விலீநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற சௌந்தரபாண்டியன் பேசும்போது....மறைந்த முன்னாள் எம். எல். ஏ. பொன்னம்மாள் எனக்கு அத்தை முறை வேண்டும். அவர் மறைவுக்குப் பிறகு இந்த தொகுதி அதிமுக வசமே உள்ளது. அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்த உங்களுக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. இப்போது அதிமுக வேட்பாளர் தேன்மொழி கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த போது அவர் கணவர்தான் ஆக்டிங் எம்எல்ஏவாக செயல்பட்டார். அவர் ஒரு காண்ட்ராக்டர் காரர் என்பதால் வடிவேலு ஒரு படத்தில் கிணறு காணாமல் போனது என்று சொன்னது போல் போடாத ரோட்டுக்கும், எரியாத லைட்டுக்கும், போடாத அடி போருக்கும் பில் போட்டு கோடிகளை சம்பாதித்து இருக்கிறார். அதில் மட்டும் கவனம் செலுத்தி கோடிகோடியாக சம்பாதித்தார்கள்.
இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதேபோல் அதற்கு பின்னால் வந்த ஊர் பேர் தெரியாத ராமசாமியும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட பல கோடி வாங்கிக்கொண்டு போனாரே தவிர உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தற்போது இந்த இடைத்தேர்தல் வரக் காரணமாக இருக்கும் தங்கதுரையும் பலகோடிகளை பெற்றுக்கொண்டு 5 கிலோ தங்கத்தையும் வாங்கிக்கொண்டு கூவத்தூர் விடுதியில் அடித்த கொட்டத்தை இது அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள்.
இப்படி தங்களை தங்கள் வளப்படுத்திக் கொள்வதற்காக அதிமுகவினர் உங்கள் ஓட்டுகளை வாங்கி சென்றனர். இனியும் கொண்டு வந்து 100, 200 கொடுத்து உங்கள் ஓட்டுகளை பெற நினைப்பார்கள். ஆனால் நான் ஏழை என்னிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை. ஆனால் என்னை வெற்றி பெறச் செய்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தளபதி முதல்வராக பதவி ஏற்பார். நான் சட்டமன்றத்தில் உங்கள் கோரிக்கை அனைத்தையும் கேட்டுப் பெற்று அனைத்தையும் நிறைவேற்றுவேன். எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த பிரச்சார பயணத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வருகிறார்கள்.