திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள குளங்களில் நீர் ஆதாரத்தை பாதுகாக்க குடிமராமத்து பணிகள் நடைபெற்றன. இதில் கோட்டை ஊராட்சி ஆரியநல்லூர் சவரிமுத்துபிள்ளை குளம் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 55 ஏக்கர் நிலப்பரப்புள்ள, இந்த குளம் (சவரிமுத்துபிள்ளை) சுமார் 200 ஏக்கர் பரப்புள்ள நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், ஊராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள குளங்களில் குடி மராமத்து பணி நடைபெறும் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி முன்னிலை கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சவரிமுத்துபிள்ளை குளத்து நீர் பாசன விவசாயிகளை அழைத்து ரூபாய் 5 லட்சத்தை குடி மராமத்து பணிக்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முறையாக குளம் தூர்வாருவோம் என்று அறிவித்துவிட்டு சென்றவர்கள் அதன் பின்னர் வரவில்லை.
குளத்தையும் தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் சவரிமுத்துபிள்ளை குளத்து நீர்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் ஏ.ராயப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது சம்மந்தமாக 30.09.19 அன்று மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக மீண்டும் 14.10.19 அன்று குடிமராமத்து பணி செய்ய மனு கொடுத்துள்ளனர். இதுநாள் வரை வட்டார வளர்ச்சி அலுவலரோ, ஊராட்சி செயலரோ குளத்து பக்கம் எட்டிபார்க்ககூட இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
இதுசம்மந்தமாக சவரிமுத்துபிள்ளை குளத்து நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.ராயப்பன் கூறுகையில்... இந்த குளத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.எஸ்.நிக்சன்பால் குடும்பத்தினர் ஆக்கிரமித்து தங்களுடைய குளம் என்று கூறி வந்தனர். அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவராக வந்த அலெக்ஸ் என்பவர் தலைமையில் முறையாக மனு கொடுத்து ஆத்தூர் வட்டாட்சியராக விசுவநாதன் இருந்த போது 2014ம் வருடம் மதுரை உயர்நீதிமன்றம் ஊராட்சிக்கு சொந்தமான குளம் என்று அறிவித்து ஆக்கிரமிப்பை அகற்றியது. அதன்பின்னர் குளத்தில் பலமுறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் குளத்தில் மராமத்து பணிகள் நடைபெற்றன. தற்போது குளத்தை ஒருசிலர் ஆக்கிரமித்து செங்கல் சூலை வைத்துள்ளனர்.
இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி செயலரும் உடந்தையாக உள்ளனர். அதனால் குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.5 லட்சத்தை செலவு செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் குளத்தில் முட்செடிகள் (சீமைகருவேல்) மரம்போல் வளர்ந்துள்ளன. எங்களுக்கு நிர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து குளத்தை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இக்குளத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெறாவிட்டால் ஆரியநல்லூர் கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் குளத்தை தூர்வார முடிவு செய்துள்ளனர். மக்களுக்கு பயன்படாத பல குளங்களை ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகள் தூர்வாரும் போது முன்னிலைகோட்டை ஊராட்சியின் முக்கிய குடிதண்ணீர் ஆதாரமாக இருக்கும் சவரிமுத்துபிள்ளை குளத்தை தூர்வாராமல் இருப்பது வேதனையாக உள்ளது என முன்னிலை கோட்டை ஊராட்சி மக்கள் கூறுகின்றனர்.