
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே விருவீடு காவல் நிலைய சோதனைச் சாவடியில் இளைஞர்களும் போலீசாரும் கட்டைகளுடன் மோதிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டுவுக்கு வந்துள்ளனர். அப்போது உசிலம்பட்டி சாலையில் விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவர்களின் வாகனம் ஒன்று போலீசார் அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.
அப்போது அங்கிருந்த போலீசார் அந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போலீசாருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருவரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. அப்போது, அவ்விளைஞர்கள் அருகில் இருந்த தென்னம் மட்டையை எடுத்துப் போலீசாரைத் தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து போலீசாரும் அந்த இளைஞர்களுடன் மல்லுக்கட்ட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், போலீசார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.