கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார ரதத்தில் அம்மன் பவனி வந்ததைக் கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா கடந்த மாதம் 20- ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு மண்டகப்படி தாரர்கள் சார்பில் பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு பூஜைகள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்தி கடனையும் பக்தர்கள் தினசரி நிறைவேற்றி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (05/03/2020) தில்லை தெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தெற்கு தெருவில் உள்ள வெள்ளாளர் மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் நேற்று இரவு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படியான அங்கு விலாஸ் மண்டகப்படியை முன்னிட்டு மின் மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் நகரில் உள்ள தெற்கு ரத வீதி, பழனி ரோடு, வடக்கு ரத வீதி உள்பட சில முக்கிய வீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் மின்னொளி ரதத்தில் வருவதைக் கண்டு ஆயிரக்கணக்கான மக்கள் கோட்டை மாரியம்மனை தரிசித்தனர்
இந்த திருவிழாவை முன்னிட்டு எப்பொழுதுமே அங்குவிலாஸ் மண்டகப்படி என்றாலே மாவட்டத்திலுள்ள நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை உள்ள மக்கள் பெருந்திரளாக திண்டுக்கலுக்கு படை எடுத்து வந்து அங்குவிலாஸ் மண்டகப்படி பார்த்துவிட்டு செல்வார்கள். அதுபோல் இந்த ஆண்டு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு விலாஸ் மண்டகப்படியை காண திண்டுக்கல்லுக்கு வந்து அம்மனை தரிசித்து மின் ஒளி ரதத்தை கண்டு அசந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு அங்கு விலாஸ் குடும்பத்தினரும் பொடிகார வெள்ளாளர் மண்டகப்படி சேர்ந்தவர்களும் சிறப்பாக மின்னொளி ரதத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மின்னொளி ரதத்தில் அங்கிங்கு பாட்டுக்கச்சேரி உரிமையாளரான முத்தையாபிள்ளை உள்பட மண்டகப்படியினரும் கலந்து கொண்டனர்.
இந்த மாசி திருவிழாவின் போது பெரும்பாலும் அலங்கார வண்டிகளிலேயே அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. இதனால் திருத்தேர் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தேர் வடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவில் முதன்முறையாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவதால், இதனை காண நகரில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.