திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் நவீந்திரன். ஜே.சி.பி. இயந்திரத் தொழிலாளியான இவர் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்காகக் கடந்த சில வாரங்களாக வத்தலகுண்டு போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைந்து வத்தலக்குண்டு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு காமராஜபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் ரோந்து பணியில் நவீந்திரன் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சேக் முகமது என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த சேக் முகமதுவை வழிமறித்த நவீந்திரன் உள்ளிட்ட போலீஸ் நண்பர்கள் ஊரடங்கு வேலையில் இரவு நேரத்தில் வெளியே சொல்லக்கூடாது, எனவே வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார்.
இதனால் ஷேக் முகமதுவிற்கும் நவீந்திரனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷேக்முகமது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீந்திரனை சரமாரியாகக் குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நவீந்திரன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே சேக் முகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி நவீந்திரன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வத்தலக்குண்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்முகமதுவைக் கைது செய்தனர். போலீஸ் நண்பர்கள் குழு இளைஞர் ஒருவர் நள்ளிரவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது