திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ளது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். இந்த காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநகராட்சி சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், அக்கரைப்பட்டி, சீவல்சரகு, பிள்ளையார்நத்தம், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் அடிபாதாளத்திற்கு சென்று விட்டது.
மைனஸ் 10 அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிதண்ணீர் எடுக்கப்பட்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதால் காமராஜர் அணை தற்போது திட்டுதிட்டாக மாறி தீவாக மாறிவிட்டது. இதனால் அணையில் விடப்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 டன் மீன்கள் (18 ஆயிரம் கிலோ) செத்து மிதந்ததால் மீன் ஏலதாரர் மற்றும் மீன் வியாபாரிகள் கண்ணீர் விட்டனர்.
வரலாறு காணாத வறட்சியால் மீன்கள் செத்து மிதப்பதாக மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். அணையை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. உயிருடன் இருக்கின்ற மீன்களை காப்பாற்ற தினசரி 60டிராக்டர் தண்ணீர் அணையில் விட்டுவருகின்றனர். மூன்று நாட்களாக 180டிராக்டர் தண்ணீர் விட்டு உயிருடன் இருக்கும் மீன்களை பிடித்து வருகின்றனர். செத்து மிதக்கும் மீன்களை கரையில் போட்டு வைத்துள்ளனர். தற்போது செத்து கிடக்கும் மீன்களில் புழுக்கள் மொய்க்க தொடங்கிவிட்டன. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் தொற்றுநோய் பரவும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அணையில் மீன்கள் இறந்து வருவது குறித்து மீன் ஏலதாரர் ஆறுமுகம் கூறுகையில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்க வருடத்திற்கு ரூ.27 லட்சம் என ஏலம் எடுத்திருந்தோம். ஆந்திராவிலிருந்து ரோகு, கட்லா, சில்வர்கெண்டை, ஜிலேபி, மிருகால், விரால் மீன்குஞ்சுகள் ஒன்றுக்கு ரூ.2.50 வீதம் விலைபேசி வாங்கி இனப்பெருக்கத்திற்காக கடந்த நவம்பர் மாதம் அணையில் விட்டிருந்தோம். ரூ.30 லட்சம் பெருமான மீன்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து மீன் பிடித்து வரும்பொழுது அணையின் தண்ணீர் மட்டம் குறைந்து கொண்டே வந்ததால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வந்தது. தற்போது காமராஜர் அணையில் மைனஸ் 10 அடி ஆழத்திற்கும் கீழே தண்ணீர் சென்றுவிட்டது.
இதனால் மீன்கள் இறந்து வருகின்றன. நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 டன் மீன்கள் இறந்து விட்டன என கண்ணீருடன் கூறினார். மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வரலாறு காணாத வறட்சியால் தண்ணீர் மட்டம் குறைந்து வருவது விவசாயிகள் மட்டுமின்றி மீன் வியாபாரிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அணைப்பகுதிக்கு பொதுமக்கள் யார் சென்றாலும் செத்து கிடக்கும் மீன்களில் மொய்க்கும் ஈக்கள் மற்றும் புழுக்கள் கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அணைக்கட்டு பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அணையின் தண்ணீர் மீன் வாடையுடன் இருப்பதால் கடந்த 2 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் எடுக்காமல் மின் மோட்டார்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!