Skip to main content

''டிஜிட்டல் விவசாயம் முதல் முதல்வரின் சூரிய பம்புசெட் திட்டம் வரை'' - தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

'' From Digital Agriculture to the Chief Minister's Solar Pumpset Project '' - Tamil Nadu Agriculture Budget 2022-23

 

நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

 

அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டின் திருந்திய மதிப்பீடு 32,775.78 கோடி ரூபாய். தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை, மா, வாழை, கொய்யா தோட்டங்களில் ஊடு பயிருக்காக 27.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு 25.9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கப்பட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசன வசதி அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி சாகுபடிக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சர்க்கரை ஆலையை நவீனமயமாக்க 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கரும்பு ஊக்கத்தொகை டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவிற்கு 5,157.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தேனீ வளர்ப்பிற்கு 10.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூண்டு சாகுபடியை உயர்த்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் காய்கறி மற்றும் பழத்தோட்டங்கள் அமைக்கப்படும். இது விவசாயம், ஊட்டசத்து குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும். சூரியகாந்தி, சோயா பீன்ஸ்க்கு கூடுதல் சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை ஊக்குவிக்க 29.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருப்பட்டி உள்ளிட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு 75 சதவிகித மானியம் உதவி வழங்கப்படும். தமிழகத்தில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். 8 கோடியில் டிஜிட்டல் விவசாய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதனால் விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு மின்னணுவகையில் கிடைக்க வழிசெய்யும்.

 

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலையில் துவரை உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க 30.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் சூரிய பம்பு செட் அமைக்கும் திட்டத்தின் கீழ் 70 சதவிகித மானியத்துடன் 3 ஆயிரம் பம்பு செட் அமைக்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் சிறுதானிய மண்டலமும், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது சிறுதானிய மண்டலமும் உருவாக்கப்படும். 7.5 லட்சம் மானாவாரி நிலங்கள் பயன்பெற 132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு சிறப்பு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 உழவர் சந்தைகளைச் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 உழவர் சந்தைகள் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் உழவர் சந்தையில் மாலைவேளையில் சிறு தானியங்கள் விற்க அனுமதி வழங்கப்படும். காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனைமரம் மேம்பாட்டிற்காக 2.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலை பெறுவதை உறுதி செய்ய விவசாய பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும். 

 

அயிரை, செல் கெண்டை, கல்பாசு உள்ளிட்ட உள்நாட்டு மீன் வகைகள் வளர்ப்பை ஊக்குவிக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளை தூரத்தில் இருந்தே  கைப்பேசி மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இரவில் பம்பு செட்டுகளை இயக்க செல்லும் விவசாயிகள் பாம்பு கடியில் இருந்து தப்பிக்க இத்திட்டம் உதவும். மிளகு, காஃபி கொட்டைகளைத் தரம்பிரிக்கும் மையங்கள் நீலகிரியில் அமைக்கப்படும். திண்டிவனம், தேனி, மணப்பாறையில் 381 கோடி ரூபாய் செலவில் 3 உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும். 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும்.

 

ட்ரோன்கள் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 60 ட்ரோன்கள் வாங்கவும், பயிற்சி மற்றும் செயல் விளக்கத்திற்காக 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 1,580 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களைச் தூர்வார 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி டெல்டாவில் 4,964 கிலோமீட்டர் கால்வாய் மற்றும் வாய்க்கால்களைத் தூர்வார 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் துவங்க தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்