வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ந்த வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 தேதி சிறை சென்ற சசிகலா, 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, சசிகலா சிறை சென்ற சில மாதங்களில் அவருக்கு சிறையில் விதிமுறைகளை மீறி விசேஷ சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்றதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார். இந்த புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அப்போதைய கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கர்நாடக அரசு கிடப்பில் போட்டுவைத்திருந்தது.
இந்நிலையில், கீதா என்பவர் சசிகலா மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வழக்கு தொடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சசிகலா மற்றும் அப்போது அவருடன் சிறையில் இருந்த இளவரசி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது. கர்நாடக அரசால் தோண்டி எடுக்கப்பட்டு, இவ்விவகாரம் தீவிரத் திசையில் நகரத் தொடங்கியிருப்பதால் சசிகலா, கைது பயத்தில் இருக்கிறார் என்கின்றனர் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.