திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு கேரளாவிலிருந்து வந்த பெண்ணை மூன்று பேர் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அண்மையில் புகார் எழுந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததால், கேரளாவில் உள்ள சொந்த ஊரான கண்ணூர் சென்ற அந்தப் பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கும் போது இந்த விஷயத்தைக் கூறியதாக தகவல்கள் பரவின. அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பழனிக்கு சென்ற திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி பத்திரிகையாளரிடம் கூறுகையில், "19ம் தேதி தங்கம்மாள், தர்மராஜ் ஆகிய இருவரும் பழனியில் தங்கியிருந்த விடுதியில் மதுபோதையில் தகராறு செய்ததால் விடுதி உரிமையாளர் அவர்களை வெளியேற்றி விட்டதாகவும், அதன்பிறகு 25ம்தேதி வரை இருவரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சர்வசாதாரணமாக உலா வந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். மேலும், விடுதி உரிமையாளரிடம் தர்மராஜ் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள காவல்துறை பெயரைப் பயன்படுத்தி விடுதி உரிமையாளரை மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தர்மராஜுடைய சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவருக்கும் திருமணமாகவில்லை என்பதும், இருவரும் கணவன் மனைவி அல்ல என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணுக்குக் கூட்டுப்பாலியல் வன்புணர்வு நடந்ததற்கான எவ்வித உடல் காயங்களும், பிறப்புறுப்பில் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தவழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழகக் காவல்துறை சார்பில் திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளாவிற்கு விரைந்துள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணிடம் 164 பிரிவின் கீழ் கேரள போலீஸார் நடத்திய ரகசிய விசாரணை குறித்த ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்” என்று கூறினார்.