கடலூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க (NH 45A) பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் (வயது 44) என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று (16/10/2021) மாலை சிதம்பரம் அருகே பெரியகுமட்டி என்ற கிராமத்தில் உள்ள தனது தங்குமிடத்திற்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, இரவு உணவை சாப்பிட்டு உறங்கியுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்த நபர், இரவு சுக்காரொட்டி (நெருப்பில் சுட்ட பரோட்டா) சாப்பிட்டு உறங்கியுள்ளார். பரோட்டா நெஞ்சில் செரிமானம் இல்லாமல் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையோ உணவு சரியில்லாமல், நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. எனினும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவில் உயிரிழப்பு என்ன காரணம் என்பது தெரிய வரும்.
பரோட்டா சாப்பிட்டதால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவது ஹோட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.