விழுப்புரம் மாவட்டம் ஆசாரம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் என்பவரின் மகன் கருணாநிதி 45 வயது. இவரது தாத்தா பாண்டுரங்கன் என்பவர் மலேசியாவில் இருந்து வாங்கிவந்த வழிவகைகளை இவர் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதில் ஒரு வைர மோதிரத்தை குடும்ப செலவிற்காக விற்பதற்கு முடிவு செய்தார் கருணாநிதி. இந்த நிலையில் அவரது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் பணிக்காக கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா (40) பெயிண்ட் அடிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.
அவரிடம் வைர மோதிரத்தை விற்பது சம்பந்தமாக அதற்கு தகுந்த வியாபாரி வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து சிவா, இது சம்பந்தமான புரோக்கர் அருள் முருகன் என்பவரிடம் கூறியுள்ளார். அருள்முருகன், சென்னை மூலக்கடை சேர்ந்த இன்னொரு புரோக்கர் சதீஷ் என்பவரிடம் வைர மோதிரம் விற்பது குறித்து கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வைர நகை வாங்குவதற்காக சென்னையில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
கருணாநிதி வைர நகையுடன் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்திற்கு வருமாறு சென்னையில் இருந்து வந்தவர்கள் அழைத்துள்ளனர். அதன்படி கருணாநிதி, பிரகலாதன் என்ற நண்பரின் காரில் கூட்டேரிப்பட்டு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 5 பேர் ஒரு காரில் வந்து காத்திருந்தனர் மற்றொரு காரில் வைர நகை புரோக்கர் அருள்முருகன் அதேபோல் இன்னொரு புரோக்கர் செந்தில் என்பவரும் இருந்துள்ளனர். சென்னையிலிருந்து வந்த ஐந்து பேரில் இரண்டு பேர் கருணாநிதி வந்த காரில் ஏறிக் கொண்டனர். கருணாநிதியுடன் வந்த அவரது நண்பர் ராவணன் அருள்முருகன் வந்த காரில் ஏறிக்கொண்டார்.
இவர்கள் அனைவரும் மயிலம் அருகே உள்ள தீவனூர் நோக்கி சென்றனர். அப்படி செல்லும் வழியில் கோபாலபுரம் என்ற இடத்தில் ஒரு வெள்ளை காருடன் 4 பேர் சாலையின் குறுக்கே மறித்து உள்ளனர். இதனால் கருணாநிதி வந்த காரை அவர்கள் நிறுத்தினார்கள். கருணாநிதி உடன்வந்த 2 பேர் கருணாநிதி வயிற்றில் கத்தி வைத்து மிரட்டியதோடு அவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு கருணாநிதியின் இந்த வைர மோதிர பை மற்றும் அவர் போட்டிருந்த தங்கச் செயின், மோதிரம் ஆகிய அனைத்தையும் பறித்துக் கொண்டு பின்னால் வந்த காரில் அவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர். வைர மோதிரத்தின் மதிப்பு மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கருணாநிதி மயிலும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது 150 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க 52 கிராம் எடையுள்ள வைர மோதிரங்களை விற்பதற்காக வந்ததாக தெரிகிறது. அப்போது திட்டமிட்டு வழிமறித்து மிளகாய் பொடி அடித்து தன்னிடம் இருந்த வைர நகைகளை பறித்து சென்றுவிட்டதாக புகாரில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் நின்ற வெள்ளை நிற கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து மயிலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வைர மோதிரத்தின் உரிமையாளர் கருணாநிதி அளித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வைர மோதிரத்தை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு புரோக்கராக இருந்து செயல்பட்ட சென்னையை சேர்ந்த அருள்முருகன், செந்தில் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகத்தில் மிளகாய்த்தூள் வீசி கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.