தர்மபுரி அருகே, ஞாயிற்றுக்கிழமை காலையில், பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருக்குமோ என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து காரைக்கால் பயணிகள் ரயில் புறப்பட்டது. காலை 9.45 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கும், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளிக்கும் இடைப்பட்ட வழித்தடத்தில் உள்ள காடுசெட்டிப்பட்டி பகுதியில் ரயில் வந்து கொண்டு இருந்தது.
வளைவான வழித்தடத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று, ரயில் இன்ஜினின் ஒரு பக்க சக்கரம் மட்டும் தடம் புரண்டு, தரையில் இறங்கியது.
இந்த அசம்பாவிதத்தை சட்டென உணர்ந்து சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தினார். வளைவான வழித்தடம் என்பதால் ரயில் மெதுவாக சென்று நின்றது. இதனால் இன்ஜினுக்கு அடுத்துள்ள பெட்டிகள் கவிழவில்லை. நல்வாய்ப்பாக ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் சிறு காயங்களின்றி உயிர் தப்பினர்.
ரயில் இன்ஜினின் ஒரு சக்கரம் மட்டும் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெங்களூருவில் உள்ள கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட ரயில் பெட்டி சரிசெய்யப்பட்டது.
தடம் புரண்ட ரயில், அந்த வழித்தடத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ள நிலையில், ரயில் தடம் புரண்டதால், சமூக விரோத கும்பல் ஏதேனும் சதி செய்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.