தர்மபுரி இரட்டைக் கொலை வழக்கில் நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில்,
இருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅள்ளி வனப்பகுதியையொட்டி செயல்படாத நிலையில் ஒரு கல் குவாரி உள்ளது. இந்தக் குவாரி அருகே ஜூலை 20ஆம் தேதி கேட்பாரற்று ஒரு கார் நின்று கொண்டிருந்தது. கார் இருந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், அதியமான்கோட்டை
காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலங்களின் அருகில் ஆதார் கார்டு, பர்ஸ், செல்போன் ஆகியவை சிதறிக் கிடந்தன. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சடலமாகக் கிடந்தவர்களில் ஒருவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் (50), மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த நிவில் ஜார்ஜ் குரூஸ் (58) என்பது தெரிய வந்தது.
கேட்பாரற்றுக் கிடந்த அந்த கார், கொலையாளிகள் பயன்படுத்தியது என்பதும், அந்த வாகனம் கேரளா பதிவெண் கொண்டது என்பதும் தெரிய வந்தது. அந்தக் கார், ஜூலை 19ஆம் தேதி இரவு சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளதை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். அன்று இரவுதான், கல் குவாரி அருகே சடலங்களை வீசிவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
இதற்கிடையே, விலை உயர்ந்த இரிடியம் உலோகத்தை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. எனினும், கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகளைத் தேடி காவல்துறை தனிப்படையினர் நாலாபுறமும் முடுக்கிவிடப்பட்டனர்.
இந்நிலையில், இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக, ஈரோட்டைச் சேர்ந்த ரகு (45), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் (38), சுரேன்பாபு (35), விஷ்ணுவர்மன் (30) ஆகிய நான்கு பேர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் சுனிர்ராஜா முன்னிலையில் சரண் அடைந்தனர். நால்வரையும் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தர்மபுரி மாவட்ட காவல்துறை தனிப்படையினர் நான்கு பேரையும் செங்கோட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை (ஜூலை 23) தர்மபுரிக்கு அழைத்து வந்து, இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் நான்கு பேரும் தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த பிரபாகரன் (40), லட்சுமணன் என்கிற அபு (37) ஆகிய இருவரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.