தர்மபுரி, பென்னாகரம் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இடிக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்றுவரையிலும் கட்டப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டி மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பென்னாகரம் பகுதி பேருந்து நிலையம் இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட அப்பேருந்து நிலையம் இன்றுவரையிலும் கட்டி முடிக்கப்படவில்லை. அதேசமயம், பணிகள் ஆரம்பிக்க தோண்டிய குழிகள் மட்டும் இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். முறையான கழிப்பிட வசதியும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் அதிகாரம் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் குறித்து தர்மபுரி மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் முத்துக்குமார், “ஏற்கனவே பேருந்து நிலையத்தைக் கட்டி முடிப்பதற்காக அதிமுக மாவட்ட நிர்வாகியான தாளப்பள்ளம் அன்பழகன், 4.5 கோடிக்கு இந்த டெண்டரை எடுத்துள்ள நிலையில், இதுநாள்வரையிலும் ஒன்றரை ஆண்டு காலங்களில் குழியை மட்டுமே எடுத்துவைத்து மற்ற எந்த வேலையும் செய்யாமல் இழுத்தடித்துவருகிறார். அரசு அதிகாரிகளும் பேருந்து நிலையம் கட்டும் வேலையைத் தள்ளிப்போட்டுவருகின்றனர். இதனால் நகரத்திலுள்ள வணிகர்கள், சிறு வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் வாழ்விழந்து நிற்கின்றனர். எனவே இந்த அவல நிலையைப் போக்க போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தைக் கட்டித்தர வேண்டும்” என்றார்.